பாஜக அரசு, கடந்த 2017இல் ’போஷன் அபியான்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாமல் குழந்தைகள் பிறக்கவும், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறும் வகையிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2018-2019ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு மாநிலம் பல்வேறு விருதுகளுக்கு தேர்வு பெற்றது.
அதன் படி நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி விருதுகளை வழங்கினார். அந்த விருதுகளை தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இயக்குநர் கவிதா ராமு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விருதுகளுடன் மூன்று கோடி ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.