பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் அந்தந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை பாராட்டுவது வழக்கமான ஒன்று. இன்றைய நிகழ்ச்சியில் கரோனா காலத்தில் மாணவர்களுக்கு புதிய வழியில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியருக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆசிரியை பற்றி நான் படிக்க நேர்ந்தது. என்.கே. ஹேமலதா என்ற இவர் விழுப்புரத்தில் ஒரு பள்ளியில், உலகின் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார். கோவிட் 19 பெருந்தொற்று நிலவும் வேளையிலும் தனது பயிற்றுவித்தலுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
இவருக்கு முன்னால் கண்டிப்பாக சவால்கள் இருந்தன. ஆனால், இவர் ஒரு நூதனமான வழிமுறையைக் கைக்கொண்டார். பாடத்திட்டத்தில் உள்ள 53 அத்தியாயங்களையும் (animated video) இயங்குபடக் காணொளிகளாக அவர் மாற்றியுள்ளார். இவற்றை ஒரு பென் ட்ரைவ் கருவி வாயிலாக தனது மாணவர்களுக்கு விநியோகம் செய்தார்.
இதனால் இவருடைய மாணவர்கள் மிகுந்த பயன் பெற்றார்கள். இதோடு கூடவே, இவர் தனது மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் உரையாற்றி வந்தார். இது படிப்பின் மீது மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டியது. நாடெங்கிலும் கரோனா காலத்தில், ஆசிரியர்கள் மேற்கொண்ட நூதனமான முயல்வுகளும், படைப்புத்திறனோடு கூடிய வகையில் பாடங்களை அளித்தலும், இணையவழிப் படிப்பு என்ற இந்த சூழ்நிலையில் விலைமதிப்பில்லாதவை.
இந்தப் படிப்புகளை எல்லாம் நீங்கள் கல்வி அமைச்சகத்தின் தீக்ஷா தளத்திலே கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என்று நான் அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாட்டின் தொலைவான பகுதிகளில் இருக்கும் மாணவ மாணவியருக்கு பெரும் ஆதாயம் உண்டாகும்" என்றார்.