புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் திருநள்ளாறு தேவஸ்தானத்தின் நான்குபுறச் சாலைகள் அமைக்கும் பணி, கோயிலுக்குச் சொந்தமான பெருமாள் கோயில் தீர்த்தக்குளம் சீரமைப்புப் பணி, பேட்டை கிராமத்தில் அரசலாற்றின் வடகரையில் படித்துறை அமைக்கும் பணி, மன்மதன் கோயில் மண்டபம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா இன்று (அக். 23) நடைபெற்றது.
இதில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, அரசுத் துறை அலுவலர்கள், கோயிலின் அறக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், "இந்தப் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படவுள்ளது. சனிப்பெயர்ச்சிக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இந்தப் பணிகளைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், கரோனாவால் தடைபட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் புதுச்சேரி, காரைக்காலில் வழக்கம்போல் இயங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...புறநகர் மின்சார ரயில்: பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம்!