கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், சமய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், டெல்லியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த நூற்றுக்கணக்கானோரும், நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஏராளமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, இவர்களது விசா முடக்கப்பட்டது. மேலும், இவர்கள் ரயில்கள், பேருந்துகள் மூலம் பயணம் செய்து பலருக்கும் தொற்று பரவ காரணமாக அமைந்ததாகவும், விசா சட்டத்தை மீறியதாகவும் பல்வேறு பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் நோய்த்தொற்றை பரப்புதல், தனிமைப்படுத்துதல் விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு அபராதம் விதித்து, அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்ப டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்நிலையில், சில காவல் நிலையங்களில் இவர்கள் மீது பதியப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை நிலுவையில் உள்ள காரணத்தினால் சிலரால் சொந்த நாடு திரும்ப முடியவில்லை எனவும், இதுவரை 108 பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.