கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னரே, கரோனாவைக் கருத்தில்கொண்டு பெரியளவில் ஒன்றுகூடுல் நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் தகுந்த இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் ஒன்பதாயிரம் பேர் வரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கேட்ட கேள்விக்கு மத்திய உள் துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
அதில், “கோவிட்-19 பரவல் காரணமாக அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் ஒரு பெரியளவிலான கூட்டம் கூட்டப்பட்டது. இதில் தகுந்த இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை. சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.
நாட்டில் பலர் கரோனா வைரசால் பாதிக்கப்பட இது முக்கியக் காரணமாக அமைந்தது. கரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை டெல்லி காவல் துறையினர் கைதுசெய்தனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீதும் இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், விசா விதிகளை மீறி கரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் தங்கியிருந்த 2,550 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் கடவுச்சீட்டுகளை கடந்த ஜூன் மாதம் தடுப்புப்பட்டியலில் மாற்றியதாகவும் உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: அன்லாக் 4.0: வழிகாட்டுதல்களுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு!