கரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 13ஆம் தேதி ஒரே இடத்தில் 200-க்கு அதிகமானோர் கூடக்கூடாது என டெல்லி அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், அதே நாள் நிசாமுதீன் மார்கசில் மூன்றாயிரத்து 400 பேர் இஸ்லாம் சமய மாநாட்டிற்காகக் கூடினர்.
இதில் இந்தோனேசியர்கள் 10 பேருக்கு மார்ச் மாதம் 20ஆம் தேதி கரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சமய மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர் அங்கிருந்து புறப்பட்டனர்.
மார்ச் 24ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆயிரம் பேரை மார்கசிலிருந்து வெளியேற்ற அனுமதி கோரி ஜமாத் நிர்வாகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அதற்கு டெல்லி அரசு பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் பின்னர், சமய மாநாட்டில் கலந்துகொண்டு ஸ்ரீநகர் திரும்பிய ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, மார்கசை காலிசெய்யுமாறு 29ஆம் தேதி டெல்லி லஜ்பத் நகர் காவல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு மார்கஸ் நிர்வாகிகள் தற்போது போக்குவரத்து வசதியில்லை, கரோனா விதிகளைக் கடைப்பிடித்து தங்கிக் கொள்கிறோம் எனத் தெரிவித்தனர். ஆனால், காவல் அலுவலர்கள் 1,548 பேரை வெளியேற்றி நோய்த்தடுப்பு மையங்களில் தங்கவைத்தனர்.
இதையடுத்து ஜமாத் தலைவர் மவுலானா ஆசாத் மீது கரோனா பரவும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் அவர் அரசு உத்தரவுகளையும், ஊரடங்கையும் மீறும்வகையில் ஆடியோ பதிவுகளை வெளிட்டதாக டெல்லி காவல் துறையினர் குற்றஞ்சாட்டினர்.
டெல்லி நிசாமுதீன் சமய மாநாட்டில் கலந்துகொண்டு மர்கசில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றவும், அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய மவுலானா சாத் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததாகவும் டெல்லி காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, நிஜாமுதீன் மார்கஸ் சமய மாநாட்டில் பங்கேற்ற கரோனா பாதிப்பு இல்லாத வெளிநாட்டினர் 916 பேரை தனிமைப்படுத்துதலிலிருந்து விடுவிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டினா் 916 போ்களில் 20 போ் சார்பில் இந்த மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்னீஷ் பட்நாகர் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற மனுதாரர்கள் 20 பேர் உள்பட வெளிநாட்டு உறுப்பினர்கள் 900-க்கும் மேற்பட்டவா்கள் வழக்கு விசாரணையில் இணைந்திருந்ததாகவும், அவா்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு குறித்து விளக்கமளிக்க டெல்லி காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இது குறித்து டெல்லி காவல் துறையினர் வெளிட்ட அறிக்கையில், “கரோனாவின் தீவிரம் குறித்து மார்கஸை சேர்ந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அயல்நாட்டினரை அவரவர் நாடுகளுக்கும், இந்தியாவைச் சேர்ந்தவர்களை அவர்களின் மாவட்டத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருந்தொற்று குறித்த சட்டப்பூர்வமான விதிமுறைகளை வேண்டுமென்றே நிராகரித்துள்ளனர். எங்களின் அறிவுறுத்தல்களை அலட்சியம்செய்து தீங்கு விளைவிக்கும் வகையில் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து சமய மாநாட்டு நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதை அவர்கள் துச்சமாக கடந்துசென்றுவிட்டனர். கவனம் செலுத்த மறுத்துவிட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: லடாக் எல்லை விவகாரம் : இந்திய-சீன உறவில் விரிசல்