டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் டெல்லி தேசிய தலைநகரப் பகுதியில் கடும் மாசு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், விவசாய கழிவுகளை எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, அழகான கார்களிலிருந்து சைக்கிள்களுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "காற்றுமாசு ஏற்படுவதற்கு விவசாயக் கழிவுகளை எரிப்பது மட்டுமே காரணம் அல்ல எனவும் அதற்குப் பல காரணிகள் உண்டு என சில நிபுணர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். எனவே, வழக்கறிஞர்கள் அனைவரும் அழகான பெரிய கார்களில் இருந்து மாறி சைக்கள்களில் பயணம் செய்ய நேரம் வந்துவிட்டது" என்றார்.
மத்திய அரசு சார்பாக ஆஜரான அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, காற்று மாசு குறைக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்த சட்டத்திருத்தத்தை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.