ராஜஸ்தான், மத்திய பிரதேச எல்லை வழியாக வந்த, பாலைவன வெட்டுக்கிளிகள் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரத்தில் உள்ள பயிர்களை பயங்கரமாகத் தாக்கியுள்ளது. வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்காக கிராம மக்கள் பாத்திரங்களில் சத்தம் எழுப்பிவருகின்றனர். குறிப்பாக, அம்பேத்கர் நகர், பிரயாகராஜ், சித்ரகூட், பிரதாப்கர், படோனி, அசாம்கர் உள்ளிட்ட உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்கள் கடந்த 48 மணி நேரமாக பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொண்டுவருகின்றன.
இது குறித்து மாவட்ட வேளாண் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராம்பிரவேஷ் கூறுகையில், "பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலிலிருந்து விவசாயிகளைக் காக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எப்போது, மாநிலத்தில் வெட்டுக்கிளி தாக்குதல்கள் நடந்தாலும், அந்த குழு சென்று விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகளை விரட்டவும், நிலையை சரிசெய்யவும் சில தீர்வுகளை வழங்கிவருகிறது.
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இங்கு சிக்கல் என்னவெனில், முன்னதாக படையெடுத்த அனைத்து வெட்டுக்கிளிகளும் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது புதிதாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து படையெடுக்கின்றன. இவை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் நமது நாட்டில் பிரச்னை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது மழைக்காலம் நெருங்கிவருவதால் வெட்டுக்கிளிகளின் சிக்கல்கள் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகளவு உள்ளன" என்றார்.