ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள், துக்க சம்பவங்களுக்கு கடற்கரைகளில் மணற்சிற்பங்கள் வடிவமைத்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மணல்சிற்பப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அவரின் உருவத்துடன் மணல்சிற்பம் ஒன்றை வடிவமைத்தார்.
மேலும், மணல்சிற்பத்தின் கீழ் பகுதியில், 'ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன்களாகப் பிரித்தது குறித்து, இந்த நாளைப் பார்ப்பதற்காகத்தான் என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என சுஷ்மா ட்விட்டரில் பதிவிட்டிருந்ததை சுதர்சன் பட்நாயக் எழுதியிருந்தார்.
சுதர்சன் பட்நாயக்கின் இந்தச் செயல் பார்ப்போரை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது.