நாட்டில் நிலவி வரும் மருத்துவ எமர்ஜென்சி சூழலில் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அந்தந்த மாநில சுகாதாரத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வேறு பிரச்னைகளுக்காக மருத்துவமனை வருபவர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஞ்சய் காந்தி உயர்கல்வி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது அறியாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் திமான் பேசுகையில், ''இருதய அடைப்பு பிரச்னை காரணமாக 63 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடனடியாக தற்காலிக பேஸ்மேக்கர் (pacemaker) தேவைப்பட்டது. அதையடுத்து நிரந்தரமாக இருதய அடைப்பு வராமல் தடுக்க பேஸ்மேக்கர் பொருத்துவதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிந்தது. இதனால் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் அனுமதிக்கப்பட்ட அறைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த நபர் ராஜ்தாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருதய சிகிச்சையளிப்பதற்கு முன்னதாக ஏன் கரோனா வைரஸ் பரிசோதனை நோயாளிக்கு நடத்தப்படவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை - கரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலி