கரோனா பரவலுக்கு மத்தியில் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருவதால் வெளியில் செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தொற்று பரவாமல் தடுக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், அதிகமாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. இருப்பினும், பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் தற்போது தென்மேற்கு பருவகாலம் வந்துவிட்டதால் அங்கு அதிக மழை பெய்யும். மழைக் காலத்தில் மக்கள் தங்கள் முகக்கவசங்களை உலர வைப்பது கடினம். அதனால் தொற்று பரவும் சாத்தியக்கூறும் அதிகம். இதனைக் கருத்தில்கொண்டு சூரத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று நீர், எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை எதிர்க்கும் தன்மைகொண்ட முகக்கவசங்களைத் தயாரித்துள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய அந்நிறுவனத்தின் விளம்பரதாரர் டாலியா, ”சந்தையில் தற்போது வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்கும் முகக்கவசத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்தில்கொண்டும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு கொண்ட இந்த முகக்கவசத்தின் முதல் அடுக்கு நீரை உட்புகாமல் பார்த்துக்கொள்கிறது.
இரண்டாவது அடுக்கு வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறது. மூன்றாவது அடுக்கு காற்றை எளிதில் சுவாசிக்க உதவுகிறது. இது சந்தையில் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. துவைக்கக்கூடிய வகையிலான இந்த முகக்கவசத்தை 30 முதல் 180 நாள்கள் வரை பயன்படுத்தலாம்” என்றார்.