கோவை ரங்கே கவுடர் வீதியில் வசித்துவந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி நிறுவன அதிபரான இவரது மகள் முஷ்கின் (11), மகன் ரித்திக் ஜெயின் (8). இந்நிலையில், 2010ஆண்டு முஷ்கினையும் ரித்திக்கையும் ஓட்டுநர் மோகன கிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் கால் டாக்சி ஒன்றில் கடத்திச் சென்றனர்.
பின்னர், உடுமலை பகுதியில் வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, முஸ்கினையும் ரித்திக்கையும் பரம்பிகுளம் ஆழியாறு திட்ட கால்வாயில் தள்ளிக் கொலை செய்தனர்.
இதில் சிறுமியின் உடல் கிட்டத்தட்ட 77 கிலோமீட்டர் தொலைவுக்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டது. அடுத்த நாள் சிறுவன் ரித்திக்கின் உடலை விவசாயிகள் மீட்டு கொடுத்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் கொலை குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரித்த நீதிபதிகள் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் உத்தரவையடுத்து இருவரையும் காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, காவலர்கள் வைத்திருந்து துப்பாக்கியை மோகன்கிருஷ்ணன் பிடிங்கி காவல் துறையினரை சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
இதில் உஷாரான காவல் துறையினர் பதிலுக்கு சுட்டதில் மோகன் கிருஷ்ணனுக்கு தலையிலும், மார்பிலும் காயமேற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான மனோகரனை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் மாவட்ட நீதிமன்றம் மனோகரனுக்கு மரண தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.