கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளி வியாபாரி. இவருக்கு பத்து வயதில் ஒரு மகள், ஏழு வயதில் ஒரு மகன் இருந்தனர். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று வாடகை வேனில் பள்ளிக்கு புறப்பட்ட இருவரையும், வேன் டிரைவர் மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணன், நண்பர் மனோகரன் உதவியுடன் பொள்ளாச்சி மலைப்பகுதிக்கு காரில் கடத்திச்சென்றார்.
மலைப்பகுதியில், சிறுமியை, பலவந்தப்படுத்தி, மோகன்ராஜ் பாலியல் வன்புணர்வு செய்தார். பின்னர், இருவரையும் அங்குள்ள பிஏபி வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தார். இதற்கு மனோகரன் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக, கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், மனோகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தபின் இருவரையும் கொன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று காவலர்கள் வேனில் விசாரணைக்காக மோகன்ராஜ், மனோகரன் ஆகியோரை அழைத்து சென்றபோது, போத்தனூர் அருகே காவல் துறையினரின் துப்பாக்கியை பிடுங்கி, காவலர்களைச் சுட்டுவிட்டு தப்பி ஓடிய மோகன்ராஜை காவல் துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மனோகரன் துப்பாக்கியால் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் மனோகரன் மீதான கொலை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் மனோகரனுக்கு, இரட்டை தூக்கு தண்டனை மற்றும் மூன்று ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிர் நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதை, சென்னை உயர் நீதிமன்றமும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி உறுதிசெய்தது. இதையடுத்து, மனோகரன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து மனோகரனை தூக்கில் போட கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு காவல் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் அனைத்துக் கட்ட விசாரணைகளும் முடிவடைந்து விட்டதாக கூறி கடந்த ஜூலை 11ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதில்,”கோவை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தும் சிறுமியையும், அவரது தம்பியையும் கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு இரட்டை தூக்கு மற்றும் 3 ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த உத்தவுக்கு தடை விதிக்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையே மீண்டும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது என கூறி தீர்ப்பு வழங்கினர்.
இதை தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்ககோரி மனோகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 16ஆம் தேதி வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்வதாக ஆசை காட்டி சிறுமி வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை!