பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பந்தளம் அரண்மனையைச் சார்ந்தோர் கடுமையாக எதிர்த்தனர்.
இதனையடுத்து பந்தளம் அரண்மனை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குருவாயூர் கோயில் நிர்வாகம்போல் சபரிமலைக்கு தனி சட்டங்களை வகுக்க வேண்டும். அதுகுறித்து முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக கடந்த ஆண்டு பம்பை பகுதியில் பெய்த கனமழையால் பம்பைக்கு இலகு ரக வாகனங்களில் செல்ல கேரள அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து இலகுரக வாகனங்களில் பம்பைக்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த பிரசன்ன குமார் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. ரவிக்குமார், என். நாகரேஷ் ஆகியோர் நேற்று விசாரணை செய்தனர்.
அப்போது, நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு இலகுரக வாகனங்களில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும், அவ்வாறு பம்பைக்கு செல்லும் வாகனங்கள் நிலக்கல்லிற்கு வந்துதான் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் பம்பை சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சபரிமலை கோயிலுக்குச் சென்ற சிறுமி தடுத்து நிறுத்தம்!