மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். 17 லட்சம் பேரிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய அந்நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது.
இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிதி நிறுவன மோசடி குறித்து, முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் விசாரித்து வந்தார். இந்த விசாரணையை அவர் முறைப்படி நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதன் பின்னர் சிபிஐ அலுவலர்கள் ராஜிவ் குமாரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இந்தச்சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ராஜிவ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்த முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 'காங்., என்.சி.பி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்குதான்': ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனா!