புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை பூ மற்றும் பழ வியாபாரம் செய்யும் இளைஞர் இறந்தார்.
இவர் தினமும் சட்டமன்றம் வந்து முதலமைச்சர், அமைச்சர்கள் அறையில் பூக்களை வைப்பார். இந்நிலையில், இவர் கரோனா தொற்று காரணமாக கடந்த 15ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 18ம்தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதனால் சட்டமன்றத்துக்கு அவசியமின்றி மக்கள் வர வேண்டாம் என்றும் இது தொடர்பாக புதுச்சேரி சட்டசபை செயலர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், “பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் சட்டசபைக்கு வந்து செல்கின்றனர். இது நோய்த் தொற்று பரவ வழிவகை செய்யும் என அஞ்சப்படுகிறது.
எனவே பொதுமக்கள் சட்டசபைக்கு வருவதை கட்டுபடுத்த முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி அவசியம் என்றால் மட்டுமே முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இதர அலுவலகத்துக்கு அலுவலர்களின் சம்மதம் பெற்ற பின்னரே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவர்.
சட்டசபைக்குள் வருவோரின் பெயர் தொலைபேசி எண் வருகைக்கான நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை. உள்ளே நுழையும் முன்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
சட்டசபைக்கு மக்கள் வருகையை கட்டுப்படுத்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மக்கள் பணியாற்றிட வேண்டும்” என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது: காரணம் என்ன?