டெல்லியில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இரண்டு நாள்களுக்கும் மேலாக நீடித்த வன்முறையில் காவல் துறையினர் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொடூராமான முறையில் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட கத்திக்குத்துகளுடன் அவரது உடல் கழிவுநீர் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது.
அங்கித் சர்மாவின் கொடூரக் கொலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் தாஹீர் ஹுசைனுக்கு தொடர்புள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டு, டெல்லி காவல் துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தாஹீர் ஹுசைன் வீட்டிலிருந்து பெட்ரோல் வெடிகுண்டு, ஆயுதங்கள், கற்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், உளவுத்துறை அதிகாரி கொலையில் வங்கதேச பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை கிளப்பியுள்ளார். தாஹீர் ஹுசைனுக்கு வங்கதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், முக்கியத்துவம் வாய்ந்த விசாரணையை அரசு கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ராஜதர்மம் குறித்து சோனியா பாடம் நடத்த வேண்டாம்: மத்திய அமைச்சர் காட்டம்!