புதுச்சேரி மாநிலம், சாரம் சக்தி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள்கள் செல்வி, கவிப்பிரியா. இவர்கள் இருவரும் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பள்ளியில் ஒன்பது மற்றும் இரண்டாம் வகுப்பு படித்துவருகின்றனர். பெற்றோர்கள் தினமும் தரும் பணத்தை செல்வியும், கவிப்பிரியாவும் சேர்த்து வைத்துவந்தனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தாங்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்தனர். இதனையடுத்து, தங்களது பெற்றோருடன் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர்கள் மாவட்ட ஆட்சியர் அருணை நேரில் சந்தித்து உண்டியலில் சேமித்து வைத்த தொகையை வழங்கினர்.
இந்த சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், பிறருக்கு உதவிடும் மனப்பான்மை கொண்ட சிறுமிகளை ஆட்சியர் மனதார பாராட்டினார். பின்னர் சட்டப்பேரவையில் மாவட்ட ஆட்சியர் அருண் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து சிறுமிகள், செல்வி, கவிப்பிரியா வழங்கிய பணத்தை முதலமைச்சரிடம் வழங்கினார்.
மாணவிகளின் நிதியை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி நிதி வழங்கிய மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலையில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம்!