கரோனா காலத்தில் பள்ளி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்த ஊரடங்கு காலத்தில் பலரும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பல தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வற்புறுத்தி வருகிறது.
மேலும், பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக கூறி குழந்தைகளை ஐந்து மணி நேரம் ஆறு மணி நேரம் வகுப்புகள் நடத்தி பள்ளி குழந்தைகளை வதைக்கிறது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கும் உரிய சம்பளம் வழங்காமல் பல தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் சிறு வயது பள்ளி குழந்தைகளுக்கும் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. அதேசமயம் சம்பளம் வழங்காததால் ஆசிரியர்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தினேஷ் ராஜா கூறினார்.