பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரையில் கணக்கு மிகவும் கடினமானப் பாடம், பிடித்தவர்களுக்கு சுலபமாக இருக்கும் ஆனால் பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகள் சிலர் கணக்கு பாடத்தை மிகப்பெரிய வெறுப்பாகவே பார்ப்பர். அப்பாடத்தையும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கற்றுத் தருகிறார்கள் ஒரு ஆட்டோ ஓட்டுநரும், தச்சரும்.
ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ராதாகிருஷ்ணப்பிள்ளை, தச்சராக பணிபுரியும் மோகனன் இருவரும் மயிலக்காடு பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடம் கற்றுத் தருகிறார்கள். கணக்கு பாடத்தை மாணவர்களுக்கு புரியும் முறையில் வித்தியாசமாக கற்றுத் தருகின்றனர். இவர்கள் இருவரும் கற்றுத் தருவதை மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் கவனிக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் அவரது ஆட்டோவில் இருக்கும் டயர், ஆட்டோவின் அளவு வைத்து கணக்கு பாடம் கற்றுத் தருகிறார். அதேபோல் தச்சர் மோகனன் அவரது தொழில் ரீதியாக அதாவது மரப் பொருட்களை வைத்து மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை கற்றுத் தருகிறார்.
மோகனன் மகள் மேகா சதீஷ் அதே பள்ளியில் தான் பயின்று வருகிறார். மகள் படிக்கும் பள்ளியிலேயே பாடம் நடத்துவது பெருமையாக இருக்கிறது என்று மோகனன் தெரிவித்துள்ளார்.
அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறுவதாவது, "கணக்கு தொடர்பாக இருவரிடமும் எவ்வித கேள்விகள் கேட்டாலும் உடனே விளக்கமளிப்பர். இவர்கள் கற்றுத்தரும் பாடத்தை மாணவர்கள் மிகவும் கவனமாகவும், ஆர்வமுடனும், பிற பாடங்களை போல் கணக்குப் பாடத்தையும் பிடித்துப் படிக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை வாழ்நாளில் அவர்கள் மறக்கவே முடியாத நினைவுகளாக வைத்திருப்பர்" என்றனர்.
இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித் தோட்டம்: மத்திய அரசு புதிய முயற்சி!