டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட நாட்டின் வடமாநிலங்களில் காற்று மாசு காரணமாக மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து, டெல்லி அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அபாய நிலையை மாசு தாண்டியதைத் தொடர்ந்து மத்திய அரசு களத்தில் குதித்தது.
மாசுவை கட்டுப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது, விதிகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாசு முக்கிய பிரச்னையாக எழுப்பப்பட்டுவருகிறது. இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "மாசுவிற்கு காரணம் விவசாய கழிவுகள் மட்டுமல்ல. வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, தொழில்மயமாக்கல், தூசி உள்ளிட்டவைதான் காரணம். விவசாயிகளுக்கு எதிரான லாபி விவசாயிகளின் மீது பழிபோட பார்க்கிறது" என்றார்.
மாசு பிரச்னை நாடு முழுவதும் பெரிய பிரச்னையாக வெடித்தபோது, அதனை கட்டுப்படுத்த கேரட் சாப்பிடும்படி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா, "நாங்கள் என்ன ஆடுகளா? மாசுவால் எங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அமைச்சர் எங்களை இசையை கேட்கும் படி கூறுகிறார். நாங்கள் இசையை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: வேலை போய்விடும் என்ற மனஅழுத்தத்தால் தற்கொலை செய்த ஐடி பெண்!