புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 26ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி உப்பளம் நகரில் உள்ள சுற்றுலாத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முதல் மனுத்தாக்கல் தொடங்கியது. காமராஜர் நகர் தொகுதி தேர்தல் அலுவலராக சுற்றுலாத் துறை இயக்குனர் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் உயர் அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் அமைப்பதற்கான அறை ஆய்வு செய்யப்பட்டது. ஈவிபேட் மெஷின்ஸ் பாதுகாப்பாக வைப்பதற்கான இடம், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.