பருவமழை தொடங்கியது விவசாயிகளை விதைப்புக்கு ஏதுவாக மண்ணை பண்படுத்தத் தூண்டியுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு விதைகளின் தரம் பற்றிய கவலை மேலோங்கியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் விவசாயிகள் விதைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் போலி விதைகளை சந்தைக்குள் விற்பனை செய்து வருகின்றனர்.
மஞ்ரியல், ககாஸ்நகர், சாத்நகர் ஆகிய பகுதிகளில் போலி பருத்தி விதைகள் கண்டறியப்பட்ட மறுநாளே கரிம்நகர் பகுதியிலும் போலி விதைகள் கண்டறியப்பட்டன. கலப்படமான விதைகள் சந்தைகளில் விற்கப்படுவது குறித்து ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் வந்ததையடுத்து, கரிம்நகர் போலீசார் நடத்திய சோதனையில் 1,800 கிலோ போலி பருத்தி விதைகள் சந்தையில் இருப்பது அம்பலமானது.
2019 ஜூலை மாதம் 16 சிறப்புக் குழு நடத்திய சோதனையில், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா வழியாக ரயில்களின் மூலம் தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த விதைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. எனினும் போலி விதைகள் பற்றிய புகார்கள் எழாமலில்லை. குண்டூர், பிரகாசம், கம்மம், நல்கொண்டா, வாராங்கல் மற்றும் அனந்தபுர் ஆகிய மாவட்டங்களில் இதன்பிறகும் போலி விதைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த இரு தெலுங்கு மாநிலங்கள் மட்டுமல்ல, பஞ்சாப்பிலும் இதே கதைதான். 125 ரூபாய் மதிப்புள்ள விதைகள் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரின்பேரில் லூதியானா (பஞ்சாப்) காவலர்கள் நடத்திய சோதனையில், அங்கு பெரிய அளவில் போலி விதைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
கர்நாடக மாநிலம் தர்வாத், பெல்லாரி, ஹவேரி ஆகிய பகுதிகளில், கடந்த மாதம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போலி விதைகள் கண்டறியப்பட்டது. இதன்மூலம் போலி விதைகள் விற்பனை எல்லைகள் கடந்து பல மாநிலங்களைச் சென்றடைந்திருப்பது நமக்கு புலப்படுகிறது. தொடரும் இந்தத் துயரத்தை துடைக்க போலி விதை விற்பனையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், போலி விதை விற்பனையாளர்கள் விவசாயிகளை அழிப்பவர்கள். போலி விதை விற்பனையை ஒழித்தாக வேண்டும். போலி விதை விற்பனையாளர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
1966ஆம் ஆண்டு முதலே தரமான விதைகள் பயன்படுத்துவது குறித்த விதிகள் மற்றும் நெறிமுறைகளின் திருத்தச் சட்டம் நமது நாட்டில் உள்ளது. ஆனால் இன்றுவரை தரமான விதைகளுக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குவதுமில்லை.
விதைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் காப்புரிமை இல்லாததும், முறையான தொழில்நுட்பம் இல்லாததும், பலரை விதை விற்பனைத் தொழிலில் ஈடுபடச் செய்துள்ளது. பேராசை பிடித்த பொறுப்பற்ற வியாபாரிகள், விரைவாக பணம் சம்பாதிக்க போலி விதைகளை தரமான விதைகள் என விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயம் சீரழிவது பற்றியோ, விவசாயிகள் இழப்பை சந்திப்பதைப் பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை.
பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான முயற்சிகளில் பல்வேறு மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்தப் போலி விதை வியாபாரம் அதைவிட கொடுமையானது. போலி விதைகளால் இழப்பை சந்திக்கும் விவசாயிகள், கடனாளிகளாக மாறுகின்றனர். விவசாய விளை பொருள் உற்பத்தியில் ஏற்படும் இந்த பாதிப்பு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் உணவு பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த குற்றச் செயலில் ஈடுபடுவர்களை கொடூர குற்றவாளிகளை தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது.
போலி விதைகளால் ஒரு விவசாயி பாதிக்கப்பட்டால், அந்த விதைகளை தயாரித்த நிறுவனம் மற்றும் அதற்கு ஒப்புதல் அளித்த அலுவலர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து விவசாயிக்கான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இந்தத் துயரம் தொடராது.
இதையும் படிங்க: ஊரடங்கை ஆவணமாக்கிய பரத் பாலாவின் 'மீண்டும் எழுவோம்'