சிறப்புமிக்க வரலாற்றை உடைய நம் நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது. குறிப்பாக, டிசம்பர் 9ஆம் தேதி 1946ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்ட பிறகு, அதன் இடைக்காலத் தலைவராக சச்சிதானந்த சின்ஹாவை அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஆச்சார்ய கிருபளானி நியமித்தார். பின்னர்தான், அதன் நிரந்தர தலைவராக ராஜேந்திர பிரசாத் மறைமுக தேர்தலின் மூலம் நியமிக்கப்பட்டார்.
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா நவம்பர் 10ஆம் தேதி 1871ஆம் ஆண்டு மகரிஷி விஸ்வமித்ரா கிராமத்தில் பிறந்தார். அவரின் தந்தையான பக்சி சிவ பிரசாத் சின்ஹா தும்ரன் மகாராஜாவிடம் தலைமை வட்டாட்சியராக பணிபுரிந்துவந்தார். தன் தொடக்க கல்வியை அந்த கிராமத்தில் பயின்ற அவர், டிசம்பர் 26ஆம் தேதி 1889ஆம் ஆண்டு சட்டப்படிப்பு கற்க இங்கிலாந்து சென்றார். 1893ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அவர் செயல்பட தொடங்கினார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பத்தாண்டு காலம் அவர் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டார். இந்திய மக்கள், இந்துஸ்தான் ரிவ்யு ஆகிய பத்திரிகைகளில் அவர் ஆசிரியராக பல காலம் பணிபுரிந்தார்.
இடைக்கால தலைவராக சின்ஹா
இங்கிலாந்து நாடாளுமன்றம் 1946ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவித்தது. நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள அரசமைப்பு மன்றத்தில் டிசம்பர் 9ஆம் தேதி 1946ஆம் ஆண்டு ஒன்று கூடினார்கள். அவர்களின் பெரும்பாலானோர் சுதந்திர போராட்ட வீரர்கள். காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ஆச்சார்ய கிருபளானி சச்சிதானந்த சின்ஹாவை அரசியல் நிர்ணய சபையின் இடைக்கால தலைவராக முன்மொழிந்தார். பின்னர், ஒரு மனதோடு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உலகின் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பை படித்துவிட்டு, சுதந்திர இந்தியாவின் தேவைக்கேற்ப அரசியலமைப்பை உருவாக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நீதிபதி குதா பக்சா கானை, சின்ஹா 1894ஆம் ஆண்டு சந்தித்தார். பின்னர், அலகாபாத் நீதிமன்றத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். குதா பக்சா கான் பாட்னாவில் 1891ஆம் ஆண்டு நூலகம் ஒன்று தொடங்கினார். இந்தியாவின் பழமையான நூலகங்களில் இதுவும் ஒன்றாகும். கான் ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்தபோது இதன் பொறுப்பை சின்ஹா எடுத்துக்கொண்டார். 1894ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை இந்த நூலகத்தின் செயலாளராக இவர் பணிபுரிந்தார்.
மேற்குவங்கத்திலிருந்து பீகாரை பிரித்தல்
மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து பீகார் மாநிலத்தை பிரிப்பதில் சின்ஹா முக்கிய பங்காற்றினார். இதற்காக பத்திரிகை துறையை அவர் பயன்படுத்தி கொண்டார். தி பீகார் ஹெரால்ட் என்ற ஒரே பத்திரிகைதான் அப்போது இருந்தது. அதன் ஆசிரியர் குரு பிரசாத் சென் ஆவார். 1894 ஆம் ஆண்டு, தி பிகார் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகையை சின்ஹா தொடங்கினார். இதன் பெயர் 1906ஆம் ஆண்டு பிகாரி என மாற்றப்பட்டது. இந்த பத்திரிகையின் ஆசிரியர்களாக சின்ஹாவும் மகேஷ் நாராயண் என்பவரும் பல காலம் இருந்தனர். பிகாரை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி இந்த பத்திரிகையின் மூலம் அவர் பரப்புரை செய்தார். இந்துக்கள், இஸ்லாமியர்கள் பிகாரிகளாக ஒன்று சேர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரின் தொடர் முயற்சி காரணமாக மேற்குவங்கத்திலிருந்து பிகார் 1905ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
சின்ஹா நூலகம்
தனது மனைவி ஸ்வர்கியா ராதிகா சின்ஹாவின் நினைவாக சின்ஹா நூலகத்தை திறக்க அவர் திட்டமிட்டார். பின்னர், 1924ஆம் ஆண்டு நூலக்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக அவர் இதனை திறந்தார். நூலகத்தை நடத்துவதற்காக 1926ஆம் ஆண்டு அறக்கட்டளை ஒன்றை அவர் நிறுவினார். அதன் நிரந்தர உறுப்பினர்களாக தலைமை நீதிபதி, முதலமைச்சர், கல்வி அமைச்சர், பாட்னா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டனர். இதுகுறித்து நூலகத்தில் பணிபுரியும் சஞ்சய் குமார், "சட்டப்படிப்பை மேற்கொள்ள சின்ஹா லண்டன் செல்ல விருப்பப்பட்டார். ஆனால், அவர் பெற்றோர் அவரை அனுப்பவில்லை. அவர் பிடிவாதமாக இருந்ததால், அவர் லண்டன் சென்றார். அவர் லண்டனிலிருந்து திரும்பி வந்த பிறகு, மற்றவர்களுடன் சேர்ந்த பீகாரை தனி மாநிலமாக அறிவிக்க கோரி இயக்கம் நடத்தினார்" என்றார்.
வயது மூப்பு காரணமாக சின்ஹா 1950ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி பாட்னாவில் உயிரிழந்தார். பிகார் மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக ராஜேந்திர பிரசாத் சென்றபோது, சின்ஹாவை இரு முறை அழைத்து பேசினார். அவரின் இறப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சின்ஹாவின் புகைபடத்தை ராஜேந்திர பிரசாத் திறந்துவைத்தார். நவீன பீகாரின் தந்தை எனவும் அறிவாசன் எனவும் சின்ஹாவை ராஜேந்திர பிரசாத் புகழ்ந்தார். சின்ஹாவால் தான் பிகார் மாநிலம் உருவானதாக சமூக ஆர்வலர் அனிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் அருண் சிங், "சின்ஹாவின் அறிவார்ந்த ஞானத்தால்தான் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். 1936 ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை பாட்னா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக சின்ஹா செயல்பட்டார். பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை சபை தலைவராகவும் அவர் செயல்பட்டார். பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களின் நிதித்துறை உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார். பிராந்தியத்தின் நிதித்துறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவர்தான்" என்றார்.