கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பாண்டு நடைபெறுகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் மாஷிதல் டவுனில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக எம்பியும், மத்திய இணை அமைச்சருமான பாபுல் சுப்ரியோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேரணியில் பேசிய பாபுல் சுப்ரியோ, " திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு மோசமான கட்சி. வரும் சட்டப் பேரவைத் தேர்தல் எனும் புயலில், அக்கட்சி காணாமல் போய்விடும். அலிபூர் சிறைக்கு வண்ணம் பூசியதை மட்டுமே மம்தா பானர்ஜி உருப்படியாக செய்துள்ளார். கூடிய விரைவில் அவரது கட்சியினர் அந்தச் சிறையில் இருப்பார்கள்" என்றார்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பல அரசியல் திருப்புமுனைகளால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: நாகாலாந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி மீண்டும் தொடக்கம்