தமிழ்நாடு, மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்தும் வேளாண் விளை பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் கேரளாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து விலையை அதிகரித்துவருகின்றன. இதனால் கேரள மக்கள் பெருமளவில் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனையடுத்து, அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்ய கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அரசு நிறுவனங்களின் மூலமாக நேரடி விற்பனை செய்து உதவி கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கேரள சப்ளை கோ, ஹார்டிகார்ப் மற்றும் நுகர்வோர் மத்திய வங்கிகளின் முகவர்கள் தங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் மூலமாக, விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு சிறந்த விலையைப் பெறுவதன் வாயிலாகப் பயனடைவார்கள்.
கடந்த பல நாள்களாக வெங்காயம் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருள்களின் விலை சீராக உயர்ந்துவருவதால், சந்தையைக் கட்டுப்படுத்த நேரடி கொள்முதல் அவசியம்.
எனவே, கேரள அரசுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா அரசுகள் உதவிட வேண்டும்" என்று அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.