குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், உலகிலேயே மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை இருக்கும் பகுதி மழை நீரால் சூழ்ந்துள்ளது. மேலும், கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சரிவர புனரமைக்கப்படாததால், உள்பகுதியில் மழை நீர் ஓடுகிறது.
இது தொடர்பான வீடியோக்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதால், விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகின் மிகப்பெரிய சிலை இப்படிப்பட்ட நிலையில் உள்ளது பெரும் வேதனை அளிக்கிறது என்றும், இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.