குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவடியா காலனியில் அமைந்துள்ளது ஒற்றுமைக்கான சிலை (வல்லபாய் படேல் சிலை). லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த சிலைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ஜூலை மாதம் வான் விருது (WAN - World Architecture News Awards) விழாவில் வல்லபாய் படேல் சிலையை காட்சிப்படுத்த இருக்கின்றனர். சர்வதேச அளவில் சிறந்த டிசைனில் கட்டமைக்கப்பட்ட கட்டடங்களை இந்த விழாவில் காட்சிப்படுத்துவார்கள். இந்தமுறை இதில் ஒற்றுமைக்கான சிலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.என். சுப்பிரமணியன், நாங்கள் இதுவரை கட்டிமுடித்த கட்டடங்களில், வல்லபாய் படேல் சிலை மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. சர்வதேச கட்டடக் கலைஞர்கள் மத்தியில் இந்த சிலைக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது எங்களுக்கு மட்டும் பெருமையல்ல, நம் தேசத்துக்கே பெருமை என்றார்.
187 மீட்டர் உயரம்கொண்ட வல்லபாய் படேல் சிலையை கட்டிமுடிக்க 33 மாதங்கள் ஆனது. ஆறாயிரத்து 500 டன் கட்டுமான இரும்பு, பதினெட்டாயிரத்து 500 டன் வலுவூட்டப்பட்ட இரும்பு, 21 லட்சம் கான்கிரீட், ஆயிரத்து 700 டன் வெண்கல உறைப்பூச்சு கொண்டு உருவாக்கப்பட்டது இந்த வல்லபாய் படேல் சிலை.
இதில் நான்காயிரத்து 500-க்கும் அதிகமான கட்டடக் கலைஞர்கள் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தமுறை வான் விருது விழா ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்றது. இந்த ஆண்டு எங்கு நடைபெறுகிறது என்பது பற்றிய தகவல் இல்லை.