டெல்லியில் மட்டுமே மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு அதிகாரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் மாநில அரசின் அனுமதியைப் பெற்றே சிபிஐ விசாரணை மேற்கொண்டுவருகிறது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட காலம்வரை, விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு பொது ஒப்புதல் வழங்கப்படும்.
இந்நிலையில், மாநில அரசிடம் அனுமதி பெறாமல் சிபிஐ தங்களுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்துவருவதாக வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். ஏ.எம். கான்வில்கர், பி.ஆர். கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, மாநில அரசின் அதிகார வரம்புக்கு கீழ் வரும் பகுதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு அதன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப சட்டம் உள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டப் பிரிவு 5இன் படி யூனியன் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி சிறப்பு காவல் சட்ட பிரிவு 6இன் படி அது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்" என்றார்கள்.
மேற்குவங்கம், ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை திரும்பப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.