டெல்லி: மொழி வாரியாக மாநிலங்கள் உதயமான நாள் என்பதால் அந்தந்த மாநிலங்களுக்கு, அந்தந்த மொழிகளில் வாழ்த்து கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டை மட்டும் புறக்கணித்துள்ள சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மொழி வாரியாக மாநிலங்கள் உதயமான நாள். இதன் நிகழ்வுகள் அந்தந்த மாநிலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடும் தனி மாநிலமாக உதித்த நாளாகும். 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது.
மெட்ராஸ் பிரெசிடென்சியில் அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு தனி மாநிலம் உருவாகியதை "தமிழ்நாடு நாள்" என்று தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழ்நாடு போல ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களும் இதே தினத்தில்தான் மொழிவாரியாக பிரிந்து தனித்தனி மாநிலங்களானது. அவர்களும் இந்நாளை கொண்டாடிவருகின்றனர். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உதயமான நாளை முன்னிட்டு அந்தந்த மாநில மொழிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆனால், தமிழ்நாடு அவரது வாழ்த்துப் பதிவில் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 7 மணி முதல் 7.15 மணி வரை அடுத்தடுத்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் உருவான நாளை முன்னிட்டு அந்தந்த மாநில மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்தார்.
இதே போல மத்திய பிரதேச மக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். ஆனால் இதே நாளில்தான் தமிழ்நாடு மாநிலம் உருவாகியது. ஆனால் தமிழ்நாடு நாளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிக்காதது மக்கள் மத்தியில் பேசுபொருளாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.