ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி 175 இடங்களுக்கு 151 இடங்களை பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது. கட்சி தொடங்கிய 10 வருடங்களில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவரைப் பற்றி தெரியாதவர்கள் கூட அவரைப்பற்றி படிக்க ஆரம்பித்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்வில் இந்த வெற்றி அவரை ஆட்டம் காண வைத்துள்ளது. மக்களின் நம்பிக்கை நாயகனாக ஜெகன் மோகன் ஜொலிக்க ஆரம்பித்து விட்டார்.
வருகின்ற 30ஆம் தேதி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில், பதவி ஏற்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கும் நாள் அன்றுதான் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார். ஜெகன் அழைப்பு விடுவதற்கு முன்பே பாஜக மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு செல்லாமல், ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலின் செல்ல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.