கொரோனாவை எதிர்கொள்வது குறித்து சார்க் நாடுகளிடையே கலந்தாய்வை மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
இதற்கு பிரதமர் மோடிக்கு, நன்றி தெரிவித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கொரோனா நோய்த்தொற்றுக்கான போரில் சார்க் நாடுகளுக்கு இடையில், காணொலி கலந்தாய்வு நடத்துவதற்கான முன் நகர்வை கட்டமைத்ததற்கு எங்களது முழு ஆதரவைத் தருகிறேன்.
சார்க் நாடுகளுக்கு இடையே கோவிட் - 19 (கொரோனா வைரஸ்) நோய்த்தொற்றை அழிப்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முன் நகர்விற்காக, அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சார்க் நாடுகளுக்கு இடையே நடைபெறும் இந்த இனிமையான விவாதமானது, புதிய சிந்தனைகள் உருவாகுவதற்கும், செயல்படுவதற்கும் உறுதுணையாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், பூடான் ஆகிய 8 நாடுகளுக்கும் இடையே கொரோனா நோய்த்தொற்று குறித்து காணொலி கலந்தாய்வு நடைபெறயிருக்கிறது. இதற்கான கலந்தாய்வில் கொரோனா வைரஸை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும், இந்நோய்த்தொற்றால் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் 8 நாடுகளும் தங்களுக்கிடையே விவாதித்துக்கொள்ள உள்ளன.
மேலும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கொரோனா நோய்த்தொற்றை சமாளிப்பதற்காக அவசர நிதியுதவியைத் தாருங்கள் என்று தன்னார்வலர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக இந்தியா சார்பில் கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதனிடையே ராஜபக்ச சார்க் தலைவர்களிடம், 'இந்த கலந்தாய்வின் மூலம் நோய்த்தொற்று காலத்தில் இருக்கும் நிதிச்சிக்கல்களை அனைத்து நாடுகளும் தீர்த்துக்கொள்ள ஒருவருக்கொருவர் உதவவேண்டும்' எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ' ராஜபக்ச கோவிட் நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கான சிறந்த பயிற்சியையும், ஒருங்கிணைப்பையும் முன் மொழிந்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளது.