இலங்கையில் நேற்று நான்கு தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 290 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சென்ற ஏழு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன ஏழு பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகர்களாவர். அடக்கிமரனஹள்ளியைச் சேர்ந்த மாரேஹவுடா, பெங்களூர் வடக்கு, ஹரோக்யதனஹள்ளி பகுதியைச் சேர்ந்த புட்டராஜூ, கவனஹள்ளியைச் சேர்ந்த ஷிவான்னா, நீலமங்கலாவில் முனியப்பா, லக்ஸ்மிநாராயாணா, ஹனுமந்தராயப்பா மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இவர்கள் ஏழு பேரும் மக்களவை தேர்தலில் நீலமங்களா தொகுதியில் போட்டியிட்ட வீரப்ப மொய்லிக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். தேர்தல் பரப்புரை முடிந்ததையடுத்து, நேற்று காலை 8 மணிக்கு இலங்கைக்கு அவர்கள் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள ஷங்கிரில்லா ஹோட்டலில் 618, 619 அறைகள் எடுத்து தங்கியிருப்பதாக தங்களது குடும்பத்தினருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏழுபேரிடமிருந்து எந்த தகவலும் வராததால் அவர்களது குடும்பத்தினர் தற்போது அச்சத்தில் உள்ளனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் இந்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.