டெல்லி: ரஷ்யா நாட்டின் கரோனா தடுப்பு மருந்தின் மனித சோதனைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக முதலாவதாக ரஷ்யா ‛ஸ்புட்னிக்-வி' என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இந்த மருந்து தற்போது 3ஆம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.
‛ஸ்புட்னிக் - வி' மருந்தாக பதிவுசெய்யப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவில் குறைந்தளவு மக்களிடமே பரிசோதனை செய்திருந்ததால், அதிகளவு மக்கள் தொகை கொண்ட, இந்தியாவில் அந்த மருந்தை பரிசோதனை செய்வது குறித்து டிசிஜிஐ அமைப்பு, டாக்டர் ரெட்டி நிறுவனத்திடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இச்சூழலில், ‛ஸ்புட்னிக்-வி' மருந்தை இந்தியாவில் 2, 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாத் கூறுகையில், "டிசிஜிஐ அமைப்பின் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவோம். அனுமதி கிடைத்துள்ளது, பரிசோதனைக்கான எங்கள் முயற்சியில் கிடைத்துள்ள முன்னேற்றமாகும். கரோனாவுக்கு எதிரான மருந்தை பாதுகாப்பானதாக கொண்டுவருவதில் உறுதியாக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.