விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது பொய் செய்திகள் பரப்பப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வதந்திகளை பரப்புவது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசுகையில், "ஒரு அமைச்சராக ஊடகம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தற்போது மட்டுமல்ல எப்போது ஊடகத்தின் சுதந்திரம் காக்கப்படும். ஆனால், அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததை காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக புகழ்பெற்ற ஊடகவியலாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
இதுதான் கருத்து சுதந்திரமா? நாட்டின் அமைதியை அது கெடுக்கிறது. வதந்திகளை பரப்புவது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. யாரெனும் அரசை விமர்சித்தால் அவர்களை வரவேற்போமே தவிர எதிர்த்ததில்லை" என்றார்.
டூல் கிட் விவகாரம் குறித்து பேசிய அவர், "இம்மாதிரியான சதி செயல்கள் இந்தியா போன்ற வலிமையான நாட்டை பாதிக்காது. உள்நாட்டு மக்களையும் வெளிநாட்டவரையும் ஈடுபடுத்தி சதிச் செயலில் சிலர் எப்படி ஈடுபட்டார்கள் என்பது குறித்து முழு தகவல்கள் கிடைத்துள்ளது" என்றார்.