கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள போகாடி ரிங் சாலையில் அமைந்துள்ள ஜிஎல்என் திருமண மண்டபத்தில் நாளை ரஷ்மி-நவீன் ஆகியோருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்திற்கு 108 கரோனா வாரியர்ஸுக்கு (கரோனா முன்களப் பணியாளர்கள்) அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இத்திருமணத்தில் கரோனா முன்களப் பணியாளர்கள்தான் முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், திருமணத்திற்கு முன்பு இவர்களது சேவைகளுக்காகப் பாராட்டப்படவுள்ளனர்.
15 தூய்மைப் பணியாளர்கள், 3 அங்கன்வாடி பணியாளர்கள், 6 ஆஷா தொழிலாளர்கள், 2 சுகாதார உதவியாளர்கள், 5 அஞ்சல் ஊழியர்கள், 11 செவிலியர்கள், 26 மருத்துவ ஊழியர்கள், 32 காவலர்கள், 11 ஊடக நபர்கள் எனத் திருமணத்திற்கு 108 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நாளைய நிகழ்வுக்கு இந்த நபர்கள் முக்கிய விருந்தினர்கள் ஆவர்.
இது குறித்து மணமகள் ரஷ்மி பேசும்போது, “கரோனா முன்களப் பணியாளர்களின் ஆசிர்வாதம் கடவுளின் ஆசிர்வாதங்களுக்கு ஒப்பாகும். இந்த கரோனா முன்களப் பணியாளர்களிடமிருந்து முழுமையான ஆசிர்வாதத்தை நான் பெற்றால் வேறு எந்த விருப்பமும் எனக்குத் தேவையில்லை என்று நம்புகிறேன்.
நாளை நடைபெறும் எங்களுடைய திருமணத்தில் இவர்கள்தான் எங்களது உறவினர்கள். எங்கள் திருமண நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்தார்.