கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் விமான போக்குவரத்துகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பிற நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற பயணிகள் வெவ்வேறு நாடுகளில் சிக்கித் தவித்துவருகின்றனர். அவர்களைச் சொந்த நாடுகளுக்கு அழைத்துவர ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த 100 பேர், ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த 72 பேர் என மொத்தம் 172 பேர் இரு வேறு சிறப்பு விமானங்கள் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து ஐதராபாத் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்கர்கள் நேற்று (ஏப்ரல் 22) இரவு 7.23 மணிக்கு ஏர் இந்திய சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து யுனைடெட் விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
அதேபோல சார்ஜாவிலிருந்து கொச்சி வழியாக ஐதராபாத் வந்த ஏர் அரேபியா சிறப்பு விமானம் மூலம் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த 72 பேர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.
ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்த வெளிநாட்டுப் பயணிகள், தெலக்கானா அரசு, அமெரிக்க மற்றும் அமீரக தூதரகங்களின் உதவியுடன் விமானம் நிலையம் அழைத்துவரப்பட்டதாக தெரிவித்தார். பயணிகள் கிளம்பும் முன் கோவிட்-19 தொற்று குறித்த முழுமையான பரிசோதனை அவர்களுக்குச் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து 10 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 750 வெளிநாட்டுப் பயணிகள் சொந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு மாத தனிமை - வீடு திரும்பும் காஷ்மீர் மாணவர்கள்