புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அணுசக்திக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினர்.
அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு அவர்கள் புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப. உதயகுமார், "தமிழ்நாடு, புதுச்சேரியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது எங்களுடைய போராட்டத்திற்கு வலுசேர்க்கிறது.
முதலமைச்சர் நாராயணசாமி மத்திய இணை அமைச்சராக இருந்தபோது கூடங்குளம் அணுஉலைக் கழிவை அங்கேயே புதைக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்பே விடுத்திருந்தோம்" எனத் தெரிவித்தார்.