கொல்கத்தா: அரசியலில் இணைய கங்குலிக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாக சிபிஐ மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளுங்கட்சியை வீழ்த்த பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது.
இந்நிலையில் பாஜகவில் சௌரவ் கங்குலி இணைய போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கங்குலி தனது அரசியல் நிலைபாடு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை (ஜன.2) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அரசியலில் இணைய கங்குலிக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாக சிபிஐ மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சிலர் கங்குலியை அரசியல் ரீதியாக பயன்படுத்த விரும்பினர். அது அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் கிரிக்கெட் விளையாட்டின் சின்னம். அவர் கிரிக்கெட்டர், வீரர் என்றே அழைக்கப்பட வேண்டும். ஆகவே கங்குலி மீது எவ்வித அரசியல் அழுத்தமும் கொடுக்கக் கூடாது. அவரும் அரசியலில் இணையக் கூடாது. எனினும் அவரது கருத்துகளை நான் எதிர்க்கவில்லை” எனக் கூறியிருந்தார்.
சிபிஐ மூத்தத் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக தலைவர் திலீப் கோஷ், 'சௌரவ் கங்குலிக்கு உடல் நிலை சரியில்லை. இதை அரசியலாக்கி லாபம் பார்க்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். சௌரவ் கங்குலிக்கு இருக்கும் மில்லியன் கணக்கான ரசிகர்களை போல் அவர் குணமடைய நாங்களும் நினைக்கிறோம்” என்றார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சௌரவ் கங்குலியை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநில அமைச்சருமான சோபந்தேப் சாட்டர்ஜி, சௌரவ் கங்குலியை எங்கள் கட்சியில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என்றார்.
முன்னதாக சனிக்கிழமை சௌரவ் கங்குலி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: கங்குலி விரைவில் குணமடைய மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்!