உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. இந்தியாவில் அதன் பரவல் மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 தாக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் -19 பரவலைத் தடுக்கவும், அதே நேரத்தில் மக்களிடையே நிலவும் தேக்க நிலையைப் போக்கவும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயின் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதற்கும், நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட வணிக நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தளர்வுகளை அறிவிக்கிறது.
அலுவலகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் மத வழிப்பாட்டு தலங்களை மீண்டும் திறப்பதற்கான 'நிலையான இயக்க நடைமுறை'களை மே 31 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அவற்றின்படி, ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
மேலும் சில பகுதிகளில் அடுத்த கட்ட தளர்வு வரும் திங்கட்கிழமை (ஏப்ரல்.8) முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் அதே வேளையில் கோவிட்-19 பரவலைத் தடுக்க பரிமாற்றச் சங்கிலியைக் கட்டுப்படுத்த பொருத்தமான விதிமுறைகளையும், ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கோவிட் -19 பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு குறியீட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடியே இருக்கும். இந்தப் பகுதிகளுக்கு வெளியே உள்ளவர்கள் மட்டுமே இவற்றைத் திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.
சினிமா அரங்குகள், விளையாட்டு மையங்கள், குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள் பாதிப்பற்ற பகுதிகளில் திறக்கப்படும். சரியான அளவிலான கூட்டத்தை அனுமதிப்பது, நிர்வகிப்பது, , கழிவறைகள், உள்ளிட்ட இடங்களை சுகாதாரமாகப் பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளை எஸ்.ஓ.பி வலியுறுத்தியுள்ளது.
கோவில்களில் பக்தி இசைப் பாட பாடகர் அல்லது பாடும் குழுக்களை அனுமதிக்கக்கூடாது. பொதுவான பிரார்த்தனை நேரங்களில், பொது பயன்பாட்டில் இருக்கும் பாய்களைத் தவிர்க்க வேண்டும். பக்தர்கள் தங்களுக்கென சொந்த பாய் அல்லது துணியைக் கொண்டு வர வேண்டும்.
பிரசாதம் விநியோகம் அல்லது புனித நீரைத் தெளித்தல் போன்ற எந்தவொரு மத வழிப்பாட்டு தளங்களிலும் அனுமதிக்கப்படக்கூடாது. மத இடங்களில் வழங்கப்படும் அன்னதானம் போன்றவை தயாரிப்பதில் தொடங்கி வழங்குவது வரை உடல் ரீதியான தூரத்தை பின்பற்ற வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றுநோயால், இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டும், 6 ஆயிரத்து 348 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9,851 புதிய பாதிப்புகளும், 273 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 5,355 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.