பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மூன்று கமிட்டிகளை அமைத்துள்ளார். அந்த மூன்று கமிட்டிகளின் தலைவராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
பொருளாதார கொள்கை குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவுக் கொள்கை குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியின் துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில், சசி தரூர், சல்மான் குர்ஷித், மக்களவை உறுப்பினர் சப்தகிரி சங்க உலாகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக குர்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்த கமிட்டியில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, மக்களவை உறுப்பினர் வின்சன்ட் எச் பாலா, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராக பாலா நியமிக்கப்பட்டுள்ளார்.