இந்துத்துவ சிந்தனையாளர்களால் கடும் தாக்குதலுக்கு ஆளாகி சமகால அரசியலில் மிகவும் இகழப்பட்டத் தலைவர்களில் முதன்மையானவர் நேரு. இன்றைய தலைமுறையினர் சமூகவலைதளத்தில் வருவதை எல்லாம் நம்பி சர்ச்சைக்குரிய மனிதராக கட்டமைக்கப்பட்ட நேருதான் இந்தியாவின் உயிர்நாடியாக இருந்தவர். இந்தியா என்பது ஒரு கருத்தாக்கம். பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். அதனை கட்டிக்காத்த மிகச்சிறந்த தலைவரான நேருவுக்கு ஆற்றிய செயல் நியாயமற்றது. 2014 ஆண்டுக்கு பிறகுதான் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்துள்ளது என்ற எண்ணம், இப்போது உள்ள இளைஞர்களுக்கு வருவதற்கு காரணம் நேருவின் சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்காதது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசியலிசம் போன்ற கொள்கைகளுக்கு உயிர் கொடுத்து இந்தியாவில் அது உயிர்ப்புடன் இயங்கி வருவதற்கு முக்கிய பங்காற்றியவர் நேரு.
![நேரு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3398623_ne.jpg)
ஜனநாயகம்தான் இந்தியாவை ஒன்றிணைக்கும் பாலம் என மிகச் சரியாக கணித்து மொழி, இனம், மதம், சாதி என பலக் கூறாக பிரிந்திருந்த மக்களைத் தேர்தல் மூலம் ஒன்றிணைத்தவர் நேரு. 1937ஆம் ஆண்டு நடந்த மாகாணத் தேர்தல்களில் நில உரிமையாளர்களுக்கு மட்டும் இருந்த வாக்குரிமையை வயது வந்த அனைவருக்கும் மாற்றியதில் நேருவின் பங்கு அளப்பரியது. இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது மற்ற ஆசிய நாடுகள் போன்று சர்வாதிகாரம் வலுப்பெறும் என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் கூறினர். அதற்கு மாறாக இந்தியாவை ஜனநாயக நாடாக உலகுக்கு பறைசாற்றினார். படித்தவர்களின் விழுக்காடு 12ஆக இருந்த போதிலும் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவை ஆறு மாதத்தில் நடத்திக் காட்டியவர் நேரு.
![நேரு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3398623_nehr.jpg)
அன்றுலிருந்து இன்றுவரை தேச நலனுக்கு சவால்விட்டு வருவது மதவாதம். அதன் உச்சக்கட்டமாக 1947 ஆம் ஆண்டு இரு நாடுகள் பிரிந்து ஒன்றாக பிறந்தது. மதவாதத்தின் கோரமுகத்தால் கிட்டத்தட்ட 5லட்சத்தில் இருந்து 10வரையில் மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். புற்று நோய் போன்ற மதவாதத்தினை ஆரம்ப கட்டத்திலே கிள்ளி எறிவதில் ஆயுத்தமான நேரு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை 1948ஆம் ஆண்டு தடை செய்தார். ஆரம்ப கட்டத்தில் மதச்சார்பின்மை என்ற சொல் இந்திய அரசியலமைப்பு முகப்புரையில் இல்லையென்றாலும் அந்த கொள்கையை தன் மனசாட்சிபோல் காத்தவர் நேரு. மதம், அரசியல் ஆகிய இரண்டும் சமகால அரசியலில் பிணைந்து இருந்தாலும், அதனை கடைசி வரை எதிர்த்து இந்தியா என்ற கருத்தாக்கத்தில் மதச்சார்பின்மையை கோடிட்டு காட்டியவர் நேரு. எனவே தான் மதவாத அமைப்புகளின் இலக்காக இன்றும் நேரு விளங்குகிறார்.
![நேரு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3398623_neh.jpg)
இந்தியா என்பது பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு. அதனை ஒன்றிணைத்து ஒரு தேசமாக கட்டமைத்ததில் நேரு மிகப் பெரிய பங்காற்றினார். 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படும்போது பிரிட்டிஷ் அரசு தேசத்தை துண்டாக்க ஒரு திட்டத்தை வகுத்தது. இந்த திட்டத்தை மவுண்ட்பேட்டன் நேருவுக்கு தெரிவித்த போது, அதனை கடுமையாக எதிர்த்து இந்தியாவை சிதறடிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு தேசத்தை ஒன்றிணைத்தவர் நேரு. ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் இன்றுவரை நேருவை வில்லனாக காட்டுவதில் சில தரப்பு முயற்சித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜம்மு காஷ்மீர் பிரச்னை கொண்டு சென்றதில் நேருவின் தவறு இருப்பது உண்மை. ஆனால் 1952 ஆம் வரை ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நேரு-ஷேக் அப்துல்லா நட்பு.
![நேரு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3398623_nr.jpg)
மேற்கத்திய நவீன கருத்துகள் மேல் நேரு கொண்ட ஆர்வத்தினால் சமூக அளவில் மிகப் பெரிய புரட்சி உருவானது. அந்த புரட்சிக்கு உறுதுணையாக இருந்தவர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர். பலதாரமுறை ஒழிப்பு, கலப்பு திருமணத்திற்கு அங்கிகாரம், சொத்துரிமையில் ஆண்களை போல் பெண்களுக்கும் உரிமை, பெண் குழந்தைகளை தத்தெடுத்தல் போன்றவற்றை சட்டம் மூலம் நிறைவேற்ற அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் உள்ள பழமைவாதிகள் இதனை எதிர்த்ததால் மசோதா நிறைவேறாமல் போனது. ஆனால் 1950க்கு பிற்பகுதிகளில் நேரு இந்த மசோதாவை பிரித்து தனித்தனி சட்டமாக நிறைவேற்றினார். சோவியத் யூனியனுக்கு சென்று அங்குள்ள தொழில்மயமாக்குதலை கண்டு வியந்த நேரு, சோசியலிசத்தை இந்தியாவில் பின்பற்ற விரும்பினார். அதனை மிகச் சரியாகவும் செய்து முடித்தார். இதன்மூலம் உலகத்தின் முதல் சோசியலிச ஜனநாயகவாதியாக நேரு திகழ்ந்தார்.
இந்தியாவுக்கு அந்த காலகட்டத்தில் மற்றொரு பிரச்னையாக இருந்தது இடது தீவிரவாதம். தானே ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்ததால் நேரு அதனை சரியாக கையாண்டு கம்யூனிஷ்ட் கட்சி பிரிவதற்கு ஒரு காரணமாக இருந்தார். நேருவின் மிகப் பெரிய தோல்வியாக பார்க்கப்படுவது சீனப் போர். இந்த ஒரு நிகழ்வுதான் நேரு வாழ்க்கையை புரட்டிபோட்ட சம்பவம். சீனாவை நட்பு நாடாக பாராட்டி கடைசிவரை அதனை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று எண்ணிய நேருவுக்கு சீனா செய்த நம்பிக்கை துரோகத்தின் விளைவுதான் சீனப் போர். இந்த ஒரு நிகழ்வு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நேருவின் கிரீடத்தில் மற்றொரு வைரக்கல் மின்னியிருக்கும். நேருவுக்கு நாம் செலுத்தும் நன்றிகடன் என்பது இந்தியாவின் ஆன்மாவாக இருந்துவரும் அரசியலமைப்பை மதித்து ஜனநாயக, மதச்சார்பின்மையை பின்பற்றுவதே ஆகும்.