காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியாகாந்தியின் மகளான பிரியங்கா காந்தி சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தீவிர தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்திவரும் பிரியங்கா, கங்கை நதியில் படகு பயணம் மேற்கொண்டு கரையோர பகுதி மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டிவருகிறார்.
இதில் படகு பயணத்தின் ஒரு பகுதியாக, ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து சாஸ்திரி சிலைக்கு அணிவித்தார்.
இந்நிலையில் பிரியங்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் பாஜகவினர், சாஸ்திரியை அவமரியாதை செய்ததாகக்கூறி அவரது சிலைக்கு கங்கை நீரை ஊற்றினர்.
இதனிடையே பிரியங்காவின் செயலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிரியங்கா அகந்தையுடன் தான் அணிந்திருந்த மாலையை, தன் கையால் எடுத்து சாஸ்திரிக்கு அணிவித்துள்ளார். சாஸ்திரி சிலைக்கு அவமாியாதை செய்த பிரியங்காவுடன் சேர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் முறையில்லாமல் செயல்பட்டுள்ளனர். காங்கிரஸின் உண்மை நிலையை இச்செயல் வெளிப்படுத்துகிறது எனக் கூறினார்.