கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலக்கட்டத்தில், சிறு, குறு நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். சிறு, குறு நிறுவனங்கள் அழிந்துவரும் நிலையில், பெரு நிறுவனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறு, குறு நிறுவனங்கள் அழிந்துவருகின்றன. அதேபோன்று பெரு நிறுவனங்கள் அழுத்ததற்கு உள்ளாகியுள்ளது. வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார சுனாமி வருகிறது என்ற எச்சரிக்கை மணியை பல மாதத்திற்கு முன்பே விடுத்திருந்தேன். ஆனால், இந்த உண்மையை தெரிவித்த காரணத்தால் பாஜகவும், ஊடகமும் என்னை கேலிக்கு உள்ளாகியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
சுமார் 1.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக்கடன், 500 தனியார் நிறுவனங்களிடமிருந்து வர வேண்டி உள்ளது என, ஊடகத்தில் வெளியான செய்தியை மேற்குறிப்பிட்டு ராகுல் காந்தி, இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இதுதான் நாம் கனவு கண்ட இந்தியாவா?' சித்ரகூட் சம்பவம் பற்றி ராகுல் கேள்வி!