பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பரப்புரை களம் சூடிபிடித்துள்ளது. இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடிபட்டிருந்த பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் சரச்சையை கிளப்பியுள்ளது.
குதும்பா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பரப்புரை மேடையில் அமர்ந்திருந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி மீது செருப்பு வீசப்படும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சக்கர சைக்கிளில் இருந்த மாற்றுத் திறனாளி ஒருவர் செருப்பை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ஆனால், இச்சம்பவம் குறித்து யாதவ் பரப்புரை மேடையில் பேசவில்லை. மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவுக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் மிரித்யுன்ஜய் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மழை, வெள்ளத்திலிருந்து நீர் நிலைகளைக் கண்காணிக்க கேசிஆர் அறிவுறுத்தல்...!