உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பிலிருந்து 3 பேர் மீண்டுவந்த நிலையில், தற்போது 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டினர் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமணைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பிரத்யேகமாக வார்டுகளை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
விமான நிலையங்கள் உஷார்ப்படுத்தப்பட்டு வெளிநாட்டிலிருந்துவரும் பயணிகளை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, மத்திய சுகாதாரத் துறை அலுவலர்களிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா வைரஸூக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்த்த மோடி