ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் எர்ணாகுளத்தின் கக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்வப்னாவிடம் சுங்கத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையின்போது, தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பிரனாயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகம் தங்கத்தை கடத்த உதவி செய்ததாக ஸ்வப்னா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு வரும் ராஜதந்திர சாமான்கள் மூலம் ஜூலை 2019இல் இருந்து 2020 ஜூன் மாதம் வரை தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்ததாக கூறியுள்ளார். தூதரகம் மூலம் கடத்துவது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில், பெரிய அளவிலான தங்கம் கடத்த தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை பயன்படுத்தி தங்கம் கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக ஜெனரல் அட்டாச் பணம் பெற்றுக்கொண்டு உதவி செய்ததாக, ஸ்வப்னா கூறினார். இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான சந்தீப் நாயர் மற்றும் கே.டி.ரமீஸ். இருவரையும் துபாயில் சந்தித்ததாக கூறிய அவர், சந்தீப் மூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சிவசங்கருடன் தனக்கு தனிப்பட்ட உறவு இருப்பதாகவும், அவருடன் விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் ஸ்வப்னா கூறினார். இருப்பினும், தங்கக் கடத்தல் பற்றி சிவசங்கருக்கு தெரியாது என்று ஸ்வப்னா சுங்க குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.