லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் தென்கரையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த சீனா, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டது.
ஆனால், இந்த முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இதையடுத்து, எல்லைப் பகுதியான லேவுக்கு நேற்று சென்ற ராணுவ தளபதி முகுந்த் நாரவனே, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்திய, சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நம்பிக்கையாக உள்ள ராணுவ வீரர்கள் சவால்களை சந்திக்க தயாராக உள்ளனர். உலகிலேயே நம் ராணுவ வீரர்கள்தான் சிறப்பானவர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லைப் பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்டும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில், ராணுவ ரீதியான பேச்சுவாரத்தை நடைபெற்றுவருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல கன்னட நடிகை வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி சோதனை!