தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சந்தேகத்திற்குமிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்துவரும் லாக்அப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இச்சம்பவம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணையின்போது தந்தை, மகன் ஆகிய இருவர் கொடூரமாகவும் மிருகத்தனமானகவும் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நான் வன்மையான கண்டனங்களைப் பதிவுசெய்து கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் காவலர்கள் மீதும் கொலை (சட்டப்பிரிவு 302) வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.
மேலும், இச்சம்பவத்தில் இவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று போராடும்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம் - மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்த கனிமொழி எம்.பி!