மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சகோதரர்கள் ராம்குமார் கோத்தாரி மற்றும் சரத்குமார் கோத்தாரி. இவர்கள் இருவரும் 1990ஆம் ஆண்டில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கொல்கத்தாவின் புர்ரா பஜார் பகுதியில் தீவிரமாக இயங்கி வந்தவர்களாவர்.
இந்த இரண்டு சகோதரர்களும், அவர்களது தாய் அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் ராமர் கோயில் நோக்கிய 'அந்தோலன்' நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தபோது, அதில் இணைந்து கர சேவை செய்ய முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர்.
உத்தரப் பிரதேச அயோத்தி பாபர் மசூதி நோக்கி 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி குஜராத்தின் சோம்நாத் கோயிலில் இருந்து தொடங்கிய பேரணியில் இணைய இரண்டு கோத்தாரி சகோதரர்களும் அக்டோபர் 22ஆம் தேதி அயோத்திக்கு ரயிலில் ஏறினர்.
இந்த பேரணியால் சட்ட ஒழுங்கு கெடுமென கூறி ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சருமான முலாயம் சிங் அதற்கு தடை விதித்திருந்தார்.
இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் அனைத்து சாலை மற்றும் ரயில் வழி போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு இருந்தன.
அயோத்திக்கு செல்வதையே ஒரே நோக்கமாக கொண்டிருந்த கர சேவகர்க,ள் வாரணாசி உள்ளிட்ட பல மாற்று வழிகளில் பயணம் மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் இருவரும் அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியை அடைந்தனர்.
கர சேவகர்கள் அனுமன் கர்ஹி எனுமிடத்தில் ஒன்றுகூடி சர்ச்சைக்குரிய இடத்தை நோக்கி ஊர்வலத்தைத் தொடங்கினர்.
அந்த ஊர்வலத்தை கோத்தாரி சகோதரர்கள் இருவரும் முன்னால் இருந்து வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காவல்துறை தடை செய்திருந்தாலும், அதனை மீறி கர சேவகர்கள் பாபர் மசூதியின் முக்கிய உச்சிப் பகுதியில் ஏறி அங்கு விஎச்பியின் காவிக்கொடியை கட்ட முயன்றனர்.
இதனையடுத்து, கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்ட 17 கரசேவகர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அயோத்தி ராமர் கோயில் கட்ட நடைபெற்ற 30 ஆண்டு கால தொடர் போராட்டத்தில் முதல் களப்பலியான கர சேவகர்களில் மூத்த தியாகிகளான அந்த 17 பேருக்கும் மரியாதை அளிக்க நாளை (ஆகஸ்ட்5) நடைபெறவிருக்கும் ராமர் கோயில் பூமிபூஜை விழாவிற்கு ராம்குமார் மற்றும் சரத்குமாரின் சகோதரி பூர்ணிமா கோத்தாரிக்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ராம் மந்திர் அறக்கட்டளை சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தனது கருத்தை நமது ஈ டிவி பாரத்திடம் பகிர்ந்த பூர்ணிமா கோத்தாரி, "490 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில் அவருக்கு கோயில் எழவுள்ளது. கரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் ராமருக்கு கோயில் கட்டும் முயற்சிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜையில் கோயிலுக்கான அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரம்மாண்ட கொண்டாட்டம், பக்தி ஆரவாரம், வெற்றி விழா என இவை அனைத்திற்கு பின்னாலும் கர சேவகர்களின் தியாக வரலாறு இருக்கிறது.
எங்கள் குடும்பத்தில் இரு கர சேவகர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகவில்லை. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்த நாள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாளாகும்.
ராமர் கோயில் உரிமை மீட்கும் இந்துக்களின் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த கர சேவகர்களின் குடும்பங்களை அயோத்தியில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.